SAPS logo

தமிழ் இலக்கிய மன்ற விழா அறிக்கை

Posted on Jan 14, Thu 2016

தமிழ் இலக்கிய ஆர்வத்தினை மாணவர்களிடத்தில் தூண்டும் விதமாக உருவாக்கப்பட்டது. புனித அந்தோணியார் பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றம். அம் மன்றத்தின் சார்பாக 14.01.2016 அன்று தமிழ் இலக்கிய மன்ற விழாவும் அதனைச் சார்ந்த செம்மொழிச் சுவடுகள் கண்காட்சி அரங்கின் திறப்பு விழாவும் பள்ளி நிர்வாகம் சார்பில் அனைவராலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழா நிகழ்வில் ம.தி.தா. இந்துக் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் முனைவர்.அ.செல்லப்பா அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருட்தந்தை.ஜோசப் கென்னடி அவர்கள் தலைமை வகிக்க பள்ளி முதல்வர் அருட்சகோதரி. யூஜின் நிர்மலா அவர்கள் முன்னிலை வகிக்க இறை வணக்க பாடலோடு விழா காலை 09.15 மணிக்கு துவங்கியது. வரவேற்கும் தமிழ் மரபின் படி சிறப்பு விருந்தினருக்குபள்ளி மாணவத் தலைவர் மாலை அணிவித்து சிறப்பாக வரவேற்பளித்தனர். பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மேடையை அலங்கரித்தன. வில்லுப் பாட்டும், நாட்டுப்புற  நடனமும் கலை நிகழ்ச்சிகளின் முத்தாரமாக விளங்கின. கவிதை எழுதி வாசிப்பில் தேறின மாணவர்களின் இரு கவிதைகள் மேடையில் அரங்கேற்றம் பெற்றன. தமிழ் இலக்கிய மன்ற சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்துப் போட்டி, கவிதைப் போட்டி, தமிழ்ச் செய்யுள் மனப்பாடப் போட்டி போன்றவற்றில் வெற்ற பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசளித்து சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து விருந்தினர் உரை மாணவ கண்மணிகளுக்கு தமிழார்வத்தைத் தூண்டும் விதமாய் அமைந்தது. விழாவின் மேடை நிகழ்ச்சிகள் மாணவி கலையரசியின் நன்றியுரையோடு இனிதே நிறைவுற்றது.

 

செம்மொழிச் சுவடுகள் கண்காட்சி அரங்கு ஏழு விரிவான தலைப்பை மையமாகக் கொண்டு ஏழு வௌ;வேறு அரங்குகளில் வடிவமைக்கப்பட்டது. சங்க இலக்கியத் தமிழ் என்னும் தலைப்பில் அமைந்த அரங்கு சங்ககாலத் தமிழர் வாழ்வை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நிலங்களை நம் முன்னே அமைத்துக் காட்டிய மாணவர்கள் அந்நில மக்களைப் போல் வேடமணிந்து நிலத்தினைக் குறித்து விளக்கியது மிகவும் சிறப்பாக இருந்தது.

'மருத்துவத் தமிழ்' என்னும் தலைப்பைத் தாங்கிய அரங்கு தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளைத் தாங்கி நின்றது. தமிழர்களால் மறக்கப்பட்ட சிறுதானிய உணவு வகைகளை மாணவிகள் தயார் செய்து பார்வையாளருக்கு விருந்தளித்தனர். சிறப்பாகச் சோளத் தோசை பார்வையாளர்களுக்கு சுடச்சுடப் பரிமாறப்பட்டது. கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சாமை, கொள்ளு, எள்ளு போன்றவற்றில் செய்யப்பட்ட உணவு வகைகள் வயிற்றுக்கு உணவளித்தன.

'கலைத் தமிழ்' என்னும் கவர்ச்சிப் பெயர் தாங்கிய அரங்கு பெயருக்கு ஏற்றார்போல பார்வையாரைச் சுண்டி இழுப்பதாகவே அமைந்திருந்தது. நாட்டுப்புறக் கலைகளான சிலம்பாட்டம், தப்பாட்டம், வில்லுப்பாட்டு, கரகாட்டம் போன்றவை அரங்கை அலங்கரித்தன. பத்தாம் வகுப்பு மாணவர் லியோ மற்றும் நாராயணன் தப்பில் தளாம் தட்ட, பத்தாம் வகுப்பு மாணவர் அனிலியாஸ் மற்றும் ஜெஸ்டின் அவ்விசைக்கு ஏற்றாற் போல சிலம்பைக் கையில் வைத்து லாவகமாகச் சுழற்றி ஆடினர். நான்காம் வகுப்பு மாணவிகள் வில்லடித்துப் பாட, ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் சௌமியா மற்றும் பகவதி கரகத்தைத் தலையில் வைத்து கரகாட்டம் ஆட அவ்வரங்கமே களை கட்டியது. மாணவர்களின் ஆட்டமும், பாட்டமும் மாணவர்களையும் ஆடத் தூண்டியது இவ்வரங்கத்தின் சிறப்பு.

'காப்பியத் தமிழ்' என்னும் தலைப்பில் அமைந்த அரங்கில் காப்பிய நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கம்பராமாயணக் குகப் படலம், திருவிளையாடற் புராண 'தருமிக்கு பொற்கிளி அளித்த படலம்', தேம்பாவணி 'மகவருள் படலம்', சீறாப்புராண 'புலி வசனித்த படலம்' ஆகிய காட்சிகளும் இவ்வரங்கினை அணி செய்தன. காப்பிய கதா பாத்திரங்களாக மாணவர்கள் பொலிவுற வேடமிட்டு காப்பிய நிகழ்வினை விளக்கிய பாங்கு மிகவும் சிறப்பு. 'முத்தமிழ்' கண்காட்சி அரங்கின் முக்கியமான தமிழ்; இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தலைப்புகளின் கீழ் மாணவர்களின் பங்கேற்பு அமைந்தது. இயல் தமிழில் பதினெண்  கீழ்க் கணக்கு நூல்கள் வடிவில் ஒன்று மற்றும் இரண்டு, மூன்றாம் வகுப்பு மாணவர்கள் நின்றிருந்தனர். நூல்களைக் குறித்த தகவல்களை மழலைத் தமிழில் கூறியது இன்னும் சிறப்பு. அரங்கின் நடுநிலையாகத் தமிழ்த் தாய் செங்கோல் ஏந்தி ஐம்பெருங்காப்பியங்களையும் அணிகலனாக அணிந்து சீர் பொருந்தி அமர்ந்திருந்தக் காட்சி காண்போர் அனைவரையும் கவர்ந்திருந்தது. அரங்கு தமிழ்ப் புலவர்களால் நிறைந்திருந்தது. இசைத் தமிழ் பாடல்கள் முழங்க நாடகத் தமிழில் வழக்குரைக் காதை எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகளால் நடிக்கப் பெற்றது.

'தொன்மைத் தமிழ்' தலைப்பு தாங்கிய அரங்கம் பழந்தமிழ்க் குமரிக் கண்ட வரைபடத்தைத் தரையிலே தாங்கி தமிழின் தொன்மையை உணர்த்தும் காட்சிப் படங்களை திரையிலே தாங்கி தமிழின் தொன்மையை தெளிவாக உணர்த்தியது.

'கைவினைப் பொருட்கள்' கண்காட்சி அரங்கு, குழந்தைகள் கையினால் செய்யப்பட்ட கவினுறு பொருட்களின் காட்சியிடமாகத் திகழ்ந்தது. கழிவுப் பொருளிலிருந்து 'கலை வண்ணங்கள்' என்னும் கருத்தையே அக் கண்காட்சி நிலை நிறுத்தியது. இக் கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைக்க வந்திருந்த சிறப்பு விருந்தினர் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளால் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டார். பின்னர் குத்து விளக்கேற்றி அரங்குகள் தொடங்கி வைக்கப்பட்டன.

தமிழ் கண்காட்சி மற்றும் தமிழ் இலக்கிய மன்ற விழா காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பார்வையாளருக்காக வைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்;களுக்கும் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கும் இவ்விழா இலக்கிய ஆர்வத்தினை தூண்டும் விதமாக அமைந்திருந்ததே சிறப்பம்சமாகும்.